Friday 10 October 2014

கறவை மாடுகளுக்கு தீவனம் அளிக்கும் முறைகள்

கறவை மாடுகளுக்கு நார்ச்சத்து குறைந்தும், செரிமான சத்துக்கள் அதிகமாகவும் உள்ள தானியங்கள் (மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, உடைந்த கோதுமை, குருணை அரிசி) புண்ணாக்கு வகைகள் (கடலை புண்ணாக்கு, எள்ளுப்புண்ணாக்கு, சூரியகாந்தி புண்ணாக்கு, சோயா புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு) தவிடு வகைகள் (அரிசி தவிடு, கோதுமை தவிடு) பருப்பு நொய் (உளுந்தம் பருப்பு, பச்சைப்பருப்பு, கொண்டைக்கடலை) வெல்லப்பாகு, உப்பு, தாதுக்கலவை (சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, செலினியம், பாஸ்பரஸ்) ஆகியவற்றை தேவையான விகிதத்தில் சரியாகக் கலந்து தயாரிக்கப்படும் தீவனம் அடர் தீவனமாகும்.
அதிக அளவில் நார்ச்சத்து அல்லது குறைந்த அளவே சேர்க்கக்கூடிய தீவனப் பொருட்களை நார்த்தீவனம் என்று சொல்கிறோம். கறவைமாடு ஒவ்வொன்றும் 100 கிலோ உடல் எடைக்கு 2.5 கிலோ உலர் பொருள் வரை உட்கொள்ளும் 400 கிலோ எடையுள்ள மாடு 10 கிலோ உலர்பொருளை உட்கொள்ளும் கறவை மாடுகளுக்கான உலர்பொருள் தேவையில் 2:3 பாகம் நார்த்தீவனத்திலிருந்தும், 1:3 பாகம், அடர் தீவனத்திலிருந்தும் வருமாறு, தீவனப்பொருட்களின் அடிப்படையில் கணக்கிட்டு அளிக்க வேண்டும். நார்த்தீவன தேவையில் 2:3 பங்கு பசுமை வகையிலிருந்தும் 1:3 பங்கு உலர் வகையிலிருந்தும் அளிக்க வேண்டும். வைக்கோல், கம்பந்தட்டை, சோளத்தட்டை, கடலைக்கொடி முதலியன உலர்த்தீவனங்கள் ஆகும். தட்டை, வைக்கோல் போன்றவைகளில் 90 சத விகிதம் பசுந்தீவனங்களில் 20-26 சதவிகிதமும், அடர் தீவனத்தில் 90 சதவிகிதமும் உலர் பொருள் உள்ளது. பொதுவாக புண்ணாக்கு, தானியங்கள், தவிடு ஆகியவைகளில் ஈரப்பசை 10 சதவிகிதமும், பசுந்தீவனத்தில் 70-75 சதவிகிதமும் உள்ளது. பொதுவாக நமது கலப்பின பசுக்கள் சுமார் 350 - 400 கிலோ கிராம் எடை இருக்கும். சாதாரண மாட்டின் எடையில் ஒவ்வொரு 100 கிலோ கிராம் எடைக்கும் 1 கிலோ காய்ந்த புல்லும், 3 கிலோ பசும்புல்லும் கொடுக்க வேண்டும்.
1.5 கிலோ கலப்புத்தீவனம் ஒரு நாளைக்கு ஒரு கறவை மாட்டிற்கு தன் உடல் பராமரிப்பு தேவையைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும். தினசரி சுமார் 2.5 லிட்டர் பால் கொடுக்கும் கறவைப் பசுக்களுக்கு உடல்நிலை பராமரிப்பிற்கு அளிக்கப்படும் 1.5 கிலோ அடர்தீவனமே போதுமானது. 2.5 லிட்டர் அளவிற்கு மேல் பால் கொடுக்கும் மாட்டிற்கு, ஒவ்வொரு 2.5 லிட்டர் பாலிற்கும் 1 கிலோ கலப்புத்தீவனம் என்ற விகிதத்தில் கூடுதலாகச் சேர்த்து அளிக்க வேண்டும்.
சினை மாடுகளுக்கு : கருவில் வளர்கிற கன்றின் வளர்ச்சிக்கான 7 மாத சினைமுதல் உடல் பராமரிப்புக்கும், பால் உற்பத்திக்கும் கொடுக்கப்படும் தீவனக் கலவையுடன் உடல் எடையைப் பொறுத்து தினம் 1-1.5 கிலோ தீவனம் அதிகமாக கொடுத்தல் வேண்டும்.
பால் வற்றிய மாடுகளுக்கு : தினசரி 1.5 கிலோ கலப்புத் தீவனம் போதுமானது.
தீவனம் அளிக்கும் முறை : பண்ணையில் ஒரு குறிப்பிட்ட தீவன முறையை மட்டுமே தினசரி கடைப்பிடிக்க வேண்டும். பொதுவாக கறவை மாடுகளுக்கு முதலில் கலப்புத் தீவனத்தையும், பின் பசுந்தீவனத்தையும், அடுத்தாற் போல் வைக்கோல் அல்லது காய்ந்த புல்லையும் கொடுக்கலாம். அடர் தீவனக் கலவையை ஊறவைத்து அல்லது அளவாக தண்ணீர் சேர்த்துக் கொடுக்கலாம். தீவனத்தட்டைகளை நறுக்கி துண்டாக்கி அளிக்க வேண்டும். அளிக்கப்படும் தீவனங்களில் திடீரென்று மாற்றம் செய்வது நல்லதன்று.
தீவனப்புற்கள் : இறவையில் சாகுபடி செய்யும் தீவனப் புற்களான நேப்பியர் புல், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியா புல் ஆகியவை இவை அனைத்தும் மண் வகைகளிலும், தட்பவெப்பநிலைகளிலும் நன்றாக வளர்கின்றன. சதுப்பு நிலமாக இருந்தால் எருலமப்புல் அல்லது நீரடிப்புல்லை தேர்ந்தெடுக்கலாம். அதிக விளைச்சலுக்கு கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ-1, கோ-2, கோ-3 பயிரிட வேண்டும்.
THANKS    தகவல் : முனைவர்கள் சோ.சித்ரா தேவி, அரங்க மதிவாணன், மு.சபாபதி, இரா.பாலகோபால், கால்நடை மருத்துவ அறிவியல் துறை, த.வே.ப.கழகம், கோவை-641 003. போன்: 0422 - 6611 212.