Friday 7 November 2014

தரமான சிவப்பு நிறம் உள்ள வற்றலைப் பெற்றிட விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய அறுவடை பின் செய்நேர்த்தி முறைகள்

மிளகாய் வற்றலின் கூடுதல் விலை வற்றலின் சிவப்பு நிறத்தன்மை மற்றும் காரத்தன்மையைப் பொறுத்தே அமைகிறது. வற்றல் ""சிறப்புத்தரம்'' ""நடுத்தரம்'' மற்றும் ""பொதுத்தரம்'' என மூன்று தரங்களாகப் பிரிக்கப்படுகிறது.
தரமான சிவப்பு நிறம் உள்ள வற்றலைப் பெற்றிட விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய அறுவடை பின் செய்நேர்த்தி முறைகள் பின்வருமாறு. மிளகாய் தோட்டத்தில் பழம் அழுகல் நோயை பூஞ்சாணக் கொல்லிகள் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும். காய்கள், ஹீலி யாத்திஸ் மற்றும் புருடீனியா புழுக்களால் தாக்கப்பட்டால் ஒருங் கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும். சிபாரிசுப்படி பொட்டாஷ் உரமிடுவதால் காய்களின் நல்ல நிறமும் காரத்தன்மையும் அதிகரிக்கிறது. மிளகாய்ச் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியவுடன் பழங்களைப் பறிக்கலாம். மிளகாய்ப் பழங்களைக் காம்புடன் பறிக்க வேண்டும். பழங்களைப் பறித்த அன்றே காயப்போட வேண்டும். மணல் பரப்பிய களங்களில் பழங்களைப் பரப்பி உலரவிட வேண்டும். மிளகாய் பழங்களை மிதமான வெப்பநிலையில் காலையிலும், மாலையிலும் நான்கு நாட்கள் காயப்போட வேண்டும். நன்கு உலர்த்திய மிளகாய் வற்றலிலிருந்து காய்ப்புழு தாக்கிய மற்றும் பழம் அழுகல் நோய் தாக்கிய, நிறம் மாறிய சண்டு வற்றல் மேலும் உடைந்த மிளகாய் வற்றலை நீக்கி நல்ல வற்றலைப் பிரித்து எடுக்க வேண்டும்.
அறையின் ஈரம் மிளகாய்ப் பழங்களைத் தாக்காமல் இருக்க தரையின் மேல் மணல் பரப்பி அதன் மேல் சேமிக்க வேண்டும். இரவில் மிளகாய்ப் பழங்கள் பனியால் பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மீது லேசான படுதாப் போட்டு மூடி வைக்கலாம். மிளகாய் வற்றல் சிவப்பு நிறமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். தவறான சேமிப்பு முறையில் வற்றல் கருப்பு நிறமாக மாறினால் இவற்றை நல்ல விலைக்கு விற்க முடியாது. மிளகாய் வற்றலை சந்தைக்கு கொண்டு செல்லும்போது சாக்கில் அமுக்காமல் அள்ளி வைத்து வற்றல் உடைந்து விடாமல் கொண்டு செல்ல வேண்டும்.
- முனைவர்கள்
கி.இராமகிருஷ்ணன், வி.கு.பால்பாண்டி,
இரா.கார்த்திக்
மண்டல ஆராய்ச்சி நிலையம்,
கோவிலாங்குளம்,
அருப்புக்கோட்டை.