Saturday 24 January 2015

விவசாயத்தில் கலக்கும் பள்ளி மாணவர்கள்..!

 ஆர்ஷா வித்யா மந்திர் பள்ளி எனும் தனியார் பள்ளியின் மாணவர்கள்... மண்வெட்டி, நாற்று, தொழுவுரக்கூடை என விவசாயத்தில் கலக்குகிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே- அதுவும் தமிழகத்தின் தலைநகரான நவநாகரிக சென்னைக்குள் இருக்கும் பள்ளியில்!
இதைப் பற்றி பேசிய பள்ளியின் தாளாளர் நிர்மலா, ''அந்தக் காலத்துல பள்ளிக்கூடம் போற எல்லா குழந்தைங்களும், வீட்டுல இருக்கறப்ப... வீட்டு வேலை, அவங்களோட குடும்பம் சார்ந்த தொழில், விவசாயம்னு எல்லாத்தையும் நடைமுறையில கத்துப்பாங்க. இதனால, அவங்களுக்கு பல துறைகள்லயும் அறிவு இருக்கும். ஆனா... எந்த நேரமும் புத்தகம், படிப்பு, பரிட்சைனே இருக்கறதால, இந்தக் கால குழந்தைங்களுக்கு அது இல்லாம போயிடுச்சு. அதனாலதான் சுற்றுச்சூழல், விவசாயம் பற்றியும் நடைமுறையில சொல்லி தர்றோம். ஒருத்தர் எத்தனை பெரிய அறிவாளியா இருந்தாலும், விவசாயத்தைப் பத்தி தெரியலனா... அந்த அறிவுக்கே அர்த்தமில்லை. அதனாலதான் அதை வெறும் புத்தக அறிவா கொடுக்காம... அனுபவ அறிவா கொடுக்கத்தான் மேடவாக்கம் பகுதியில ரெண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, பயிற்சியாளரையும் நியமிச்சுருக்கோம். எல்லா வகுப்பு மாணவர்களும் இயற்கை விவசாயப் பயிற்சியில் பங்கேற்கணும்கிறத கட்டாயமாக்கியிருக்கோம். எதிர்காலத்துல இன்னும் இதை விரிவுபடுத்தலாம்னும் தீர்மானிச்சுருக்கோம்'' என்றார், கண்களில் ஆர்வம் மின்ன!
புறநகர் பகுதியான மேடவாக்கத்திலிருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில், இரண்டு நிமிடம் பயணித்தால், வலதுபுறத்தில் வருகிறது இந்தப் பள்ளிக்கூடத்தின் பயிற்சிப் பண்ணை. அங்கே சென்ற நம்மை, பண்ணை மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், பயிற்சியாளர்கள் சுமதி, ஐஸ்வர்யா ஆகியோர் வரவேற்றனர். அங்கே மாணவ-மாணவிகள்... நெல் வயலில் உரமிடும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்த... ''எங்கப்பா பசுமை விகடன் வாங்கறாரே... நாங்களும் அப்பப்ப படிக்கிறோமே'' என்று ஆர்வமானார்கள் மாணவ-மாணவிகள்.
அறிவியலோடு அறிமுகமாகும் இயற்கை விவசாயம்!
''தொழுவுரம் எப்படி தயார் செய்கிறீர்கள்..?'' என்று கேட்டோம். மொத்த மாணவர்களும் போட்டிப்போட... அனைவரின் சார்பாக 9-ம் வகுப்பு மாணவன் சத்யா ஆர்வமுடன் பேசினான்.
''காய்ஞ்ச நிலத்துல ஆறு அடி நீளம், ரெண்டரை அடி அகலம் கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து... அதுல தென்னமட்டைகளைப் பரப்பி வைக்கணும். அதுக்கு மேல காய்ஞ்ச இலை தழைகள பரப்பணும். அதுக்கு மேல மாட்டு சாணம், கோமியம் கலந்த கெட்டியான கரைசல பரவலா ஊத்தணும். அடுத்ததா, தண்ணியில 24 மணிநேரம் ஊற வெச்ச மரக்கரியைப் பரவலா போடணும். இது கார்பன் சத்துக்கு. அடுத்ததா, வேப்பிலை, ஆடு, மாடுகள் சாப்பிடாத பச்சை இலை, தழைகளைப் போடணும். இது நைட்ரஜன் சத்துக்காக. அடுத்ததா, சாம்பல், சுண்ணாம்புத் தூள் ரெண்டையும் கலந்து போடணும். இது தாது சத்துக்களுக்காக. அதுக்கு மேல பச்சை தென்ன ஓலைகளை அடுக்கணும். இதுல தினமும் தண்ணி தெளிச்சுட்டு வரணும். 25 நாள் கழிச்சு கம்பால கொத்தி கலக்கி விடணும். மூணு மாசத்துல மண்புழுக்கள் உருவாகி, நல்ல உரமா மாறிடும். இத நேரடியா நிலத்துல கொட்டலாம். விளைச்சல் சிறப்பா இருக்கும்'' என்று தேர்ந்த விவசாயி போல சத்யா சொல்லி முடிக்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஒன்பதாம் வகுப்பு மாணவியின் ஒற்றைநாற்று!
நெல் சாகுபடி முறை பற்றி பேசிய ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆயுஷாஸ்ரீ, ''ஒரு ஏக்கர் சேற்று வயல்ல தொழுவுரத்தையும் பச்சை இலை தழைகளையும் போடணும். இலைகள் மூலமா, மைக்ரோ நியூட்ரிஷன் (நுண்ணூட்டச் சத்துக்கள்)... தொழுவுரம் மூலமா பாஸ்பரஸ், கார்பன், சாம்பல் எனர்ஜி எல்லாம் கிடைச்சுடும். சேற்று வயலை ப்ளோயிங் (உழுது) பண்ணி, நடுறதுக்கு ஏத்த மாதிரி தயார் பண்ணணும். மூணு கிலோ நெல் விதையை நாத்துவிட்டு,
25 நாள்ல பறிச்சு, ஒவ்வொரு நாத்துக்கும் 25 சென்டி மீட்டர் 'கேப்’ விட்டு, எஸ்.ஆர்.ஐ. மாடல்ல (ஒற்றை நாற்று நடவு) நடணும். அதிகமா தண்ணி விடாம நிலத்துல ஈரம் இருக்கற மாதிரி தண்ணி பாய்ச்சிட்டு வரணும். பதினஞ்சு நாள்ல கோனோவீடர்ல களைகளை அமுக்கி விடணும். அப்பப்போ பஞ்சகவ்யா விடணும். தேவைப்படுறப்போ நாமளே தயாரிக்கிற பூச்சிவிரட்டியையும் தெளிக்கணும். இந்த மாடல்ல சாகுபடி செய்றப்போ, விதை அளவு, ஆட்கள் செலவு, களை பறிக்கற செலவு எல்லாமே குறையும். பயிர்களுக்கு இடையிலே நல்ல 'கேப்’ இருக்கறதால... காற்றோட்டமும், சூரிய ஒளியும் நல்லா கிடைக்குது. இதனால, பயிர்கள் வேகமா வளருது. 130 நாள்ல இருந்து 140 நாளுக்குள்ள அறுவடை பண்ணிடலாம்'' என்று அழகாக விவரித்தார்.
பயிற்சியாளர் சுமதி (ஆரோவில் 'எகோ-புரோ’ அமைப்பில் பணிபுரிகிறார்), ''சிட்டியில இருக்குற பசங்களுக்கு பீட்சா, பர்கர், கோக் மட்டும்தான் தெரியும். ஆனா, இவங்களுக்கு இயற்கை விவசாயம், பயிர்கள், நெல், அரிசி... எல்லாமே தெரியும். நெல் சாகு படிக்கு வயல் தயாரிப்புல இருந்து அறுவடை வரைக்கும் அத்தனை விஷயங்களும் இவங் களுக்கு அத்துபடி. போன தடவை பூங்கார் நெல்லை ஒரு ஏக்கர்ல விதைச்சுருந்தோம். முழுக்க மாணவர்கள்தான் பயிர் செஞ்சாங்க. பண்ணையில இருக்கற ஆட்களை மாணவர்களுக்கு உதவியா பயன்படுத்தினோம். ஒரு ஏக்கர்ல 32 மூட்டை (75 கிலோ) மகசூலா கிடைச்சுது. வழக்கமா 25 மூட்டைதான் கிடைக்கும். ஆனா, நாங்க இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தினதால.... சாதனை அளவா விளைஞ்சுருக்கு.
இந்தமுறை கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா நடவு போட்டிருக்கோம். அடுத்து... பொன்னி நெல் போடறதுக்கான முயற்சியில மாணவர்கள் இருக்காங்க. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மதிய நேரத்திலும், சனிக்கிழமை காலையிலும் இங்க பயிற்சி இருக்கும்'' என்று சொன்னார்.
இந்த மாணவர்கள்... எதிர்காலத்தில் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தால்... விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நிச்சயம் சிந்திப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. மற்ற பள்ளிக்கூடங்களும், இப்படி தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டால், தலைமுறைகள் தாண்டியும் விவசாயமும் செழிக்கும்!
தொடர்புக்கு, ஆர்ஷா வித்யா மந்திர் பள்ளி,
தொலைபேசி: 044-22300505,
செல்போன்: 98405-74244
எகோ-புரோ, தொலைபேசி: 0413-2622469.
பசுமைப் பாடம் சொல்லும் மகன்!
மாணவர்கள், இயற்கை வழி விவசாயத்தில் பூங்கார் நெல்லை விதைத்து, அசத்தலான மகசூலை அள்ளியிருக்கிறார்கள். இந்த சந்தோஷத்தை மாணவர்களுக்கு முழுமையாக அளிக்கும் வகையில், அந்த நெல்லை அரிசியாக்கி, அவர்களுக்கே வழங்கும் நிகழ்ச்சி, சமீபத்தில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி, ஆரோவில் 'எகோ-புரோ’ அமைப்பின் முதன்மை அலுவலர் லூக்காஸ், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அரிசிப் பைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
அரிசிப்பையோடு நின்று கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் கேசவ் மித்தன், ''ஆரம்பத்துல மாட்டுச் சாணத்தைத் தொடுறதுக்கு அருவருப்பா இருந்துச்சு. இப்ப அதெல்லாம் பழகிடுச்சு. நடவுல இருந்து அறுவடை வரைக்கும் எல்லாம் எனக்குத் தெரியும். இப்போ என்னோட சிலபஸ்ல விவசாயமும் சேர்ந்துடுச்சு'' என்றான், பெருமிதமாக!
மகனின் பேச்சை ரசித்தபடி நின்றிருந்த தந்தை வெற்றிவேல், ''சின்ன வயசுல எனக்குக் கிடைச்ச விவசாய அனுபவம் என் மகனுக்கு கிடைக்காம போயிமோனு கவலைபட்டுக்கிட்டு இருந்தேன். இப்ப எனக்கே அவன் இயற்கை விவசாயம் பத்தி நிறைய பாடம் நடத்துறான்'' என்றார், உற்சாகமாக.

No comments:

Post a Comment