Wednesday 6 August 2014

வருவாய் தரும் கோழி வளர்ப்பு!

கால்நடை வளர்ப்பு தொழிலில் தமிழகத்தில் பொதுவாக அனைவரின் பங்களிப்பும் இருப்பது கோழி வளர்ப்பில்தான். பசு, ஆடு, முயல் வளர்ப்பு போன்றவற்றைக் காட்டிலும் கோழி வளர்ப்பு மிக எளிது. இறைச்சிக்கான பிராய்லர் கோழி வளர்ப்பு பெரிய பண்ணைகளுடன் முடிந்துவிடுகிறது. ஆனால், நாட்டுக்கோழி வளர்ப்பு வீடுதோறும் இருந்து வருகிறது.
எனினும், நாட்டுக்கோழியையும் சிறிய பண்ணை முறையில் வளர்த்தால் அதிக லாபம் பெறலாம். தரமான நாட்டுக்கோழி முட்டைகளைத் தேர்ந்தெடுத்து, கருவிகள் மூலம் நாமே பொரிக்கச் செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின், அடை காத்த முட்டைகளைப் பொரிக்கச் செய்ய கேட்சர் மெஷின் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். புதிதாக தொழில் தொடங்குவோர் குறைந்த முதலீட்டில் நாட்டுக்கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதே சிறந்தது.
கரையான்கள் கொடுக்கலாம்: முதன்முதலாக கோழி வளர்ப்பில் ஈடுபட விரும்புவோர் தோட்டங்களில் 20 முதல் 50 கோழிக்குஞ்சுகளை 10 கூடுகளைப் பயன்படுத்தி வளர்த்துப் பார்க்கலாம். நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் பராமரிப்பு மிகவும் முக்கிய இடம் பெறுகிறது. பொதுவாக வேறு பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
முதல் 48 நாள்களுக்கு புரோட்டின் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும். அதன் பிறகு தீவனத்துடன் கீரை, கரையான்களைக் கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை நீரில் கலந்துகொடுக்கலாம்.
கேரட், பெரிய வெங்காயம் போன்றவற்றைப் பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாள்களுக்கு மேல் கடைசிவரை ஏதாவது ஒரு கீரை வகையைப் பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசி அதிகரிக்கும்.
கோழிக் கூண்டுகளிலும் பண்ணைகளில் பயன்படுத்துவதைப்போல தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகாமலிருக்க அடிக்கடி கிளறிவிட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதைத் தவிர்க்க, 20 முதல் 30 நாள்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும்.
மொத்தமாக 80 முதல் 100 நாள்களில் சேவல், கோழிகளை விற்பனைக்கு அனுப்ப முடியும். இறைச்சி விற்பனையாளர்கள், ஹோட்டல்கள் போன்றவை நாட்டுக்கோழிகளை நேரடியாக வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. இதன் மூலம் அதிக வருவாய் பெறலாம்.
நாட்டுக்கோழி வளர்ப்பு, அதுகுறித்த கூடுதல் விவரங்களை விவசாயிகள் அறிந்துகொள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீபுரம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு நேரில் சென்று பல்கலைக்கழகட்க் பேராசிரியர்களைச் சந்தித்து விளக்கம் பெறலாம்.

No comments:

Post a Comment