Saturday, 26 July 2014

பழங்குடியினருக்கு விவசாயம் செய்ய உதவும் தாட்கோ

தாட்கோ மூலம் ஆதி திராவிடர் சமூகத்தினருக்கு மட்டுமின்றி பழங்குடியினருக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. அவை குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் எஸ்.சக்திவேல்.
விவசாயம் சார்ந்த தொழில் மேற்கொள்ள பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கடனுதவி வழங்கப்படுகிறதா?
பழங்குடியினர் நில மேம்பாட்டு திட்டம் உள்ளது. இதில் வேறு சமூகத்தினர் ஊடுருவி விடக்கூடாது என்பதில் அரசு மிக கவனமாக உள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வது உட்பட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே பழங்குடியினரை இந்த திட்டத்தில் பயனாளி ஆக்குவர். திட்டத்தில் விண்ணப்பிப்பவர் பழங்குடியினர்தான் என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிப்பது மிக அவசியம்.
இதற்கான நிபந்தனைகள் என்னென்ன?
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பாக, விண்ணப்பதாரர் விவசாயியாக இருக்க வேண்டும். அதற்கான அத்தாட்சிகளையும் இணைக்க வேண்டும். தாட்கோ திட்டங்களின்கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்ககூடாது.
பழங்குடியினர் நில மேம்பாட்டு திட்டத்தில் மானியம் உள்ளதா?
ஆம். நில மேம்பாட்டு திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 50 சதவீதம் அல்லது 3.75 லட்சம் ரூபாய். இதில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும்.
பயனாளிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? பழங்குடியினருக்குதான் திட்டங்கள் சென்று சேர்கின்றன என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?
பழங்குடியினர் தங்களது விவசாயம் சார்ந்த வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் அவர்களின் இடங்களிலேயே தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே திட்டத்தின் அடிப்படை நோக்கம். பழங்குடியினர் நில மேம்பாட்டு திட்டத்தில் பயனாளிகளை தேர்ந்தெடுக்க தேர்வுக் குழு உள்ளது. அந்தக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியர் இருப்பார்.
வேளாண்மை இணை இயக்குநர் , தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர், மாவட்ட முதன்மை வங்கி அலுவலர், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சேவைப் பகுதி வங்கியாளர் ஆகியோர் உறுப்பினராக இருப்பர். மாவட்ட தாட்கோ மேலாளர் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். இக்குழுவினரே பழங்குடியினர் நில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்வு செய்வர். பல துறைகளின் பிரதிநிதிகள் வெகு கவனமாக பரிசீலிப்பதால் இதில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. திட்டத்தின் முழுப் பலன்களும் பழங்குடியினரை சென்று சேரும்.

No comments:

Post a Comment