Saturday 26 July 2014

கழிவுகளில் இருந்து செலவில்லாத இயற்கை உரம்

தோட்டத்தில் பயிரிட்டுள்ள செடி, கொடிகளின் வளர்ச்சிக்கு விலை உயர்ந்த ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விட இயற்கையான வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உரங்களை பயன்படுத்துவது மண் வளர்த்திற்கும் செடிகளுக்கும் ஆரோக்கியமானது என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள்.

இயற்கை உர தயாரிப்பு நாம் அன்றாட‌ம் ச‌மைய‌லுக்கு பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள், போன்றவையே சிறந்த உரமாக உபயோகிக்கலாம். வெங்காய‌த் தோல், உருளைக்கிழ‌ங்கு தோல், உபயோகப்படுத்த முடியாத தக்காளி, இலைக்கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காம‌ல் வீட்டில் கொல்லைபுற‌த்தில் ஒரு குழி தோண்டி அதை அதில் கொட்டி கொஞ்ச‌ம் ம‌ண்ணை தூவி விடுங்க‌ள் உரக்குழி தயாராகிவிடும்.

இதேபோல் உபயோகப்படுத்தப்பட்ட டீதூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம் கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகிறது. மாடி வீட்டில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ள் ஒரு உடைந்த‌ ம‌ண் ச‌ட்டி அல்ல‌து ப‌க்கெட்டை வைத்து அதில் ம‌ண்ணை போட்டி இந்த‌ இய‌ற்கை உர‌த்தை த‌யாரிக்க‌லாம். இந்த‌ க‌ழிவு ந‌ல்ல‌ வெயில் ப‌டும் ப‌டியாக‌வும் இருக்க‌ வேண்டும்.இப்ப‌டி செய்வதால் கழிவுப் பொருட்களில் உள்ள ச‌த்து எல்லாம் ஒன்றாகி ம‌க்கி உர‌மாகும்.இதை தோட்ட‌த்து காய்க‌றி செடிக‌ளுக்கு உர‌மிட்டால் செடி ந‌ன்றாக‌ வ‌ள‌ரும்.

இதனால் சுவையான‌ காய்க‌றிக‌ளும் கிடைக்கும். மட்கும் இலைகள் பெரிய பூங்கா மற்றும் தோட்டங்களில் உதிர்ந்து கிடக்கும் இலை, தழைகளை சேகரம் செய்து எடுத்து வந்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்து வைக்க வேண்டும். கழிவுகளை மட்கவைக்கும் முன்பாக அவற்றை சிறு சிறு துகள்களாக்க வேண்டும். இந்த கழிவுகளில் இருக்கும் கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து விகிதம் தான் மட்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகளாகும்.

எனவே கரிமச்சத்து மற்றும் தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை மற்றும் காய்ந்த கழிவுகளை சேர்த்து கலக்க வேண்டும். சமையல் அறை காய்கறி கழிவுகள். பழுப்பு கழிவுகள்- வைக்கோல், காய்ந்த இலைகள் மற்றும் காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மட்க வைக்க முடியும்.

ஆக்ஸிஜன் அவசியம் 'கம்போஸ்ட் குழிகளில்' ஆக்சிஜன் அதிகமாக இருந்தால் தான் நுண்ணுயிர்க்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டில் இருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த குழியில் இருக்கும் கழிவுகளை கிளறி விடுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், இந்த கழிவை மக்க வைக்க உருவாகி இருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.

ஈரப்பதம் தேவை எந்த சூழ்நிலையிலும் கம்போஸ்ட் குழிகளில் ஈரப்பதம் குறையாமல்பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு குறையும் பட்சத்தில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மட்கும் தன்மை வெகுவாக பாதிக்கப்படும். மட்கிய உரம் முதிர்வடைதல் மேல் கண்டவாறு 30 நாட்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் இந்த கழிவானது முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மட்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும்.

முதிர்வடைந்த மக்கிய உரத்தினை கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ சல்லடை கொண்டு சலித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மட்கிய உரத்தினை,நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாட்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.


இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரமானது செறிவூட்டப்பட்ட உரமாகும். இந்த உரமானது சாதாரண மக்கிய உரத்தை விட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியை தூண்டுவதற்கும் உதவும். வீட்டில் இருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில் கூட இது போன்ற இலைக்கழிவுகளை போட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம். அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது மட்க வைக்கும் பயிர்க்குழி போல் பயன்படும்.

No comments:

Post a Comment